டெக்கீலா உலகம் முழுவதும் மது பிரியர்களின் மனதை கவர்ந்துவிட்டது. ஆனால் இந்த பானம் வெறும் மதுபானம் மட்டும் அல்ல, மெக்சிகோ கலாச்சாரத்தின் பெருமையையும் தாங்கி நிற்கிறது.
நீல அகவே தாவரத்திலிருந்து மட்டுமே தயாரிக்கப்படும் டெக்கீலா, லில்லி குடும்பத்தைச் சேர்ந்த சிறப்பு தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இந்த தாவரம் கூர்மையான நீண்ட இலைகளுக்குப் புகழ்பெற்றது. 1918-ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் பரவிய போது, மருத்துவர்கள் கூட டெக்கீலாவை சிகிச்சைக்காக பரிந்துரைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உப்பு, எலுமிச்சை சேர்த்து குடிப்பது காய்ச்சலின் அறிகுறிகளை குறைக்கும் என அவர்கள் நம்பினர். அதனால் டெக்கீலா பண்டிகை பானமாக மட்டுமல்ல, மருந்து பானமாகவும் பழங்காலத்திலிருந்தே பார்க்கப்பட்டு வருகிறது.
டெக்கீலாவின் வரலாறு ஆஸ்டெக் நாகரிக காலத்துக்கே சென்றடைகிறது. கிமு 250-300-ஆம் ஆண்டு காலத்தில், அஸ்டெக்குகள் நீல அகவே தாவரத்தின் கூழிலிருந்து பானம் எடுத்து புளிக்க வைத்தனர். அந்த பானம் புனிதமானதாகக் கருதப்பட்டு மத விழாக்களிலும் சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டது.
காலப்போக்கில் இது உலகம் முழுவதும் பிரபலமான பானமாக மாறியது. இன்று டெக்கீலா சுத்தமாகவே அருந்தப்படுகிறது, ஏனெனில் இதன் ஆல்கஹால் அளவு 40 முதல் 50 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. இந்த வலுவான சுவையால் குடிப்பவர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை தருகிறது.
டெக்கீலாவின் உற்பத்தி மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாநிலத்தில் அதிகமாக நடக்கிறது. அங்குள்ள டெக்கீலா நகரிலிருந்து இந்த பானம் தனது பெயரைப் பெற்றது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 166 வகையான அகவே தாவரங்கள் உள்ளன, அதில் 125 வகைகள் மெக்சிகோவில் மட்டுமே காணப்படுகின்றன.
குறிப்பாக எரிமலை சாம்பலால் நிரம்பிய சிவப்பு மண்ணில் இந்த தாவரம் சிறப்பாக வளரும். வருடந்தோறும் 300 மில்லியனுக்கும் அதிகமான தாவரங்கள் அறுவடை செய்யப்பட்டு டெக்கீலா தயாரிக்கப்படுகிறது. அதனால் தான், டெக்கீலா மெக்சிகோவின் பெருமை மட்டுமல்ல, உலகளாவிய குடிபோதையரின் விருப்ப பானமாக மாறியுள்ளது.