சுதந்திர தின விழாவில் நடந்த சம்பவம்..! பிரசவ வலியில் துடி துடித்த நிறைமாத கர்ப்பிணி… ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் போலீஸ்… குவியும் பாராட்டுகள்..!!!
SeithiSolai Tamil August 17, 2025 12:48 AM

சுதந்திர தினத்தையொட்டி, திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நள்ளிரவு 12 மணியளவில் ஒரு ஆட்டோவில் இருந்து பெண்ணின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் காவலர் கோகிலா, உடனடியாக ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, ஒடிசாவைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணை, பிரசவத்திற்காக அவரது கணவர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது தெரியவந்தது.

ஆனால், பாரதிக்கு பாதி குழந்தை வெளியே வந்த நிலையில், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தது. இதையறிந்த கோகிலா, தனது நர்சிங் பயிற்சியைப் பயன்படுத்தி, துணிச்சலுடன் ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்து, அழகான பெண் குழந்தையை பத்திரமாக பிறக்க வைத்தார்.

பிரசவத்திற்குப் பின், பாரதியையும், குழந்தையையும் உடனடியாக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததையடுத்து, தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

பாரதியின் உயிரைக் காப்பாற்றி, பிரசவத்தில் உதவிய கோகிலாவின் துணிச்சலை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், உயர் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். இதுகுறித்து கோகிலா கூறுகையில், “நர்சிங் பயின்று, மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.

சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சேர்ந்தேன். பிரசவம் பார்த்த அனுபவத்தால், எந்த பதற்றமும் இன்றி பாரதிக்கு பிரசவம் பார்த்தேன். தாயும் குழந்தையும் நலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.