அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இந்திய-அமெரிக்க வம்சாவளியினரை கௌரவிக்கும் வகையில், வரலாற்றில் முதன்முறையாக இந்திய மூவர்ணக் கொடி, அந்த நகரின் அடையாளமாக கருதப்படும் ‘ஸ்பேஸ் நீடில்’ கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்பட்டது. 605 அடி உயரமுள்ள இக்கோபுரத்தில் வேறொரு நாட்டின் கொடி ஏற்றப்படும் சம்பவம் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்வில், சியாட்டில் நகரத்தில் வாழும் இந்தியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, தேசியக் கொடியை அருகிலிருந்து கண்டு, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து, கெர்ரி பார்க் பகுதியில் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஆடம் ஸ்மித், வாஷிங்டன் மாநில உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டெப்ரா ஸ்டீபன்ஸ், சியாட்டில் துறைமுக ஆணையர் சாம் சோ உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தேசிய கீதம் ஒலிக்க, பாரம்பரிய இந்திய நடனங்கள் களைகட்ட, அமெரிக்காவின் வான்வெளியில் பறந்த மூவர்ணக் கொடியை மக்கள் கண்ணாரக் கண்ட மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இந்த நிகழ்வை இந்திய தூதரகம் பெருமையுடன் வெளியிட்ட செய்திக்குறிப்பு தற்போது வைரலாகி வருகிறது.