"புதினுக்கு வெற்றி, டிரம்புக்கு ஏமாற்றம்" : சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
BBC Tamil August 17, 2025 07:48 PM
Getty Images போர் நிறுத்தம் பற்றிய எந்த அறிவிப்பும் அலாஸ்கா உச்சிமாநாட்டில் இடம்பெறவில்லை.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி அலாஸ்காவில் நடைபெற்ற டிரம்ப்-புதின் உச்சிமாநாடு மீது ஒட்டுமொத்த உலகின் கவனம் இருந்தது.

யுக்ரேன் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஆக்கப்பூர்வமான பாதைக்கு இந்த பேச்சுவார்த்தை இட்டுச் செல்லும் என சந்திப்பிற்கு முன்பு நம்பப்பட்டது. ஆனால் போர்நிறுத்தம் பற்றி எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை, அமைதி ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை.

அலாஸ்கா சந்திப்பிற்குப் பிறகு டிரம்பும் புதினும் கூட்டாக செய்தி அறிவிப்பை வாசித்தனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையால் ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான விளைவுகள் பற்றி எந்த தகவலும் கொடுக்கவில்லை. இருவரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

இந்த சந்திப்பு பற்றி உலகம் முழுவதும் உள்ள இணையதளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெவ்வேறு மதிப்பீடுகள் வெளிவந்துள்ளன.

சில மதிப்பீடுகள் இது புதினுக்கு வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளன. சில செய்திகள் டிரம்ப் சந்திக்கும் கடினமாக கேள்விகள் பற்றி பேசியுள்ளன. பல கட்டுரைகள் இந்த சந்திப்பு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கான தளத்தை தயார் செய்துள்ளது எனக் கூறியுள்ளன. ஆனால் தற்போதைக்கு முடிவுகள் அளவானதாகவே இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளன.

புதினுக்கு வேண்டியது கிடைத்துவிட்டது - சிஎன்என்

அமெரிக்க தொலைக்காட்சியான சிஎன்என், அலாஸ்காவில் புதின் எதிர்பார்த்த அனைத்தும் அவருக்கு கிடைத்துவிட்டது எனத் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த செய்தி, "புதினுக்கு தனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்த அனைத்து முடிவுகளும் கிடைத்துவிட்டன. அதற்கு மாறாக டிரம்புக்கு சந்திப்புக்கு முந்தைய அவரின் சொந்த எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளது.

டிரம்புக்கு சிறிய பலன்கள் மட்டுமே கிடைத்துள்ளதா? என சிஎன்என் செய்தியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்படும் எதிர்கால அமைதி ஒப்பந்தத்தில் யுக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அடித்தளத்தை அவர்கள் உருவாக்கிவிட்டார்களா என்கிற கேள்வியும் உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"டிரம்ப் நிறைய முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்திப்பிற்கு 10/10 மதிப்பெண் வழங்குவதாகவும் கூறினார். ஆனால் இவை அனைத்தும் ரஷ்ய அதிபருக்கு தான் பெரிய வெற்றி கிடைத்துள்ளதையே காட்டுகின்றன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பிரமாண்ட வரவேற்பு, ஆனால் ஆக்கப்பூர்வமான முடிவுகள் இல்லை'

அமெரிக்க செய்தித்தாளான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், அலாஸ்காவில் புதினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தும் டிரம்புக்கு எந்த ஆக்கப்பூர்வமான முடிவுகளும் கிடைக்கவில்லை என தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

அந்த செய்தியில், "அலாஸ்காவில் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு, ராணுவ சாகசம் மற்றும் தனது வாகனத்தில் சவாரி கொடுத்து வரவேற்றார் டிரம்ப். இது பிரம்மாண்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் வாஷிங்டனுக்கு திரும்புகையில் காட்டுவதற்கு டிரம்பிடம் எதுவுமில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் பதவியேற்றதும் முதல் நாளிலே போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்த டிரம்ப் தற்காலிக போர்நிறுத்தத்தை எட்டுவதில் கூட தோல்வியைச் சந்தித்துள்ளார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சந்திப்பு மாஸ்கோவில்?

"டிரம்ப் தனது விருந்தாளியான புதினை வரவேற்றார். ஆனால் இந்த சந்திப்பின் ஒரே முடிவு 'அடுத்த முறை மாஸ்கோவில்' என புதின் கூறியதைப் போல" அவர்கள் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டது மட்டும் தான்" என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக ரஷ்ய அதிபர் அமெரிக்க மண்ணில் கால் பதித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலாஸ்காவில் ராணுவ தளத்தில் இரு தலைவர்களுக்கும் இடையே சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. நான்கு அமெரிக்க போர் விமானங்களின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டார் புதின்.

"இத்தகைய இணக்கமான வரவேற்பு, இரு தலைவர்களும் ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி ஒப்பந்தத்தை அடைய முடியுமா என்கிற கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை" என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் "டிரம்ப் மீண்டும் மீண்டும் சுற்றியிருந்த மேடையை நோக்கியும், செய்தியாளர்களை காண்பித்தும், அமெரிக்க வலிமையின் காட்சிப்படுத்தலை நோக்கியும் சைகை செய்தார். சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த தலைவர்கள், மேலே பறந்து சென்ற பி2 ஸ்டீல்த் போர் விமானங்களை மேல்நோக்கி பார்த்தபடி நடந்து சென்றனர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Getty Images அடுத்த சந்திப்பை மாஸ்கோவில் நடத்தலாம் என புதின் தெரிவித்துள்ளார். புகைப்படங்கள் மீதான விமர்சனம் - தி டெலிகிராப்

இந்த சந்திப்பின்போது வெளியான சில புகைப்படங்கள் விமர்சனத்திற்கான காரணமாக மாறியது என பிரிட்டன் செய்தித்தாளான தி டெலிகிராப் தெரிவித்துள்ளது.

"அமெரிக்க வீரர்கள், புதினின் விமானம் முன்பாக குனிந்து சிவப்பு கம்பளத்தை விரித்த காட்சிகள் பலருக்கும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த ஒட்டுமொத்த நிகழ்வின் இறுதியில் புதினுக்கு வேண்டிய முடிவு கிடைத்தது. அமெரிக்க அதிபர் உடன் தான் கை குலுக்கும் புகைப்படத்திற்கு ஆசைப்பட்டார் புதின். உலகளாவிய அரசியலின் மிக முக்கியமான மேடையில் ரஷ்யா தற்போதும் உள்ளது என அவர் உலகிற்கு காட்ட விரும்புகிறார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய தலைவர்கள் யுக்ரேனுக்கு ஆதரவளிக்க தவறினால் அவர்கள் வரலாற்றுக்குப் பதில் சொல்ல வேண்டி வரும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கும் தெரியாது - லா மோண்ட்

பிரெஞ்சு செய்தித்தாளான லா மோண்டில் வெளியான செய்தி ஒன்று இந்த சந்திப்பை தோல்வி என விவரித்துள்ளது

அந்த செய்தியின்படி, "அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என யாருக்கும் தெரியாது. எந்த ஒப்பந்தமும் பொதுவெளியில் வைக்கப்படவில்லை."

"புதினுக்கு அழுத்தம் கொடுக்க தவறிய டிரம்ப், அதற்கு மாறாக யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்" என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் கருத்துக்கள் குழப்பத்தை உண்டாக்கியது

ஹாங்காங்கைச் சேர்ந்த செய்தித்தாளான சௌத் சைனா மார்னிங் போஸ்ட் இந்த சந்திப்பிற்குப் பிறகு எழுந்த குழப்பத்தை குறிப்பிட்டு காட்டியுள்ளது.

"இந்த சந்திப்பிற்குப் பிறகான டிரம்பின் கருத்துக்கள் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள யுக்ரேனின் பகுதிகளை அவர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார் என்கிற பிம்பத்தை உருவாக்கியது" என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் "கூட்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. ஆனால் டிரம்பும் சரி புதினும் சரி, யாருமே ஆக்கப்பூர்வமான முடிவுகள் அல்லது தகவல்களைப் பகிரவில்லை. அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை" எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு முக்கியமானதாக அமைந்தது - குளோபல் டைம்ஸ்

சீன செய்தித்தாளாக குளோபல் டைம்ஸ் இந்த சந்திப்பை ஒரு அடையாள வெற்றி என அழைத்துள்ளது.

"புதினும் டிரம்பும் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் சுமார் மூன்று மணி நேரம் சந்தித்தனர். ஆனால் அந்த சந்திப்பு யுக்ரேன் நெருக்கடி மீது எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் முடிந்தது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன வல்லுநர்கள் இந்த சந்திப்பு ஒரு அடையாளகரமானது எனக் கூறியதாக அந்த செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு சர்வதேச அளவில் ரஷ்யாவின் தனிமைப்படுத்தலை உடைத்துள்ளது என்றும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான களத்தை உருவாக்கியுள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

'விரைவாக முடிந்த சந்திப்பு'

ரஷ்ய செய்தித்தாளான மாஸ்கோவ்ஸ்கி கொம்சோமால்ட்ஸின் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று இந்த சந்திப்பு விரைவாக முடிந்ததாக தெரிவித்துள்ளது.

"இருவரும் மிகவும் இணக்கமாகச் சந்தித்து, இரவு உணவு கூட ஒன்றாக உண்ணாமல் இணக்கமின்றி பிரிந்து சென்றனர்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்கானது என சிலர் கூறி வந்த நிலையில் அத்தகைய கூற்றுக்கள் வெறும் யூகங்களாக முடிந்துவிட்டன என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்திக்குறிப்பில் "இரு தரப்பிலிருந்தும் ஐந்து கேள்விகள் எடுத்துக் கொள்ளப்படும் என பத்திரிகையாளர்களிடம் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் டிரம்பும் புதினும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமலே சென்றுவிட்டனர், இதனால் பலர் கோபமும் ஏமாற்றமும் அடைந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.