பாமக பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கி நடந்து வரும் நிலையில் அன்புமணிக்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே கடந்த சில காலமாக முரண்பாடுகள் நிலவி வரும் நிலையில், இருவரும் ஒருசேர பாமக நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் அன்புமணி கட்சியை அபகரித்துக் கொள்ள முயல்வதாகவும், வீட்டில் ஆடியோ கருவிகளை வைத்து உளவு பார்த்ததாகவும் ராமதாஸ் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் அன்புமணி கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை கட்சியின் தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி முடிவுகளை எடுக்க முழு அதிகாரத்தையும் ராமதாஸுக்கு வழங்கி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதை தொடர்ந்து அன்புமணி மீது பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. பாமக கட்சியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாக, சிறப்பு பொதுக்குழுவில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு 16 குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. அதன்பேரில் எடுக்கப்படும் நடவடிக்கையின்படி, அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. இது அன்புமணி ஆதரவாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K