நாய்களோ அப்பாவி.. இரக்கமோ நமது மொழி.. சென்னையில் விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்..!
WEBDUNIA TAMIL August 17, 2025 07:48 PM

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் தங்குமிடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் விலங்கு ஆர்வலர்கள் போராட்டத்தை நடத்தினர்.

தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் நிலவும் பிரச்சனைகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த நாய்களை கருணைக் கொலை செய்ய கூடாது என்றும், அவைகளை தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் ஒரு புதிய உத்தரவை ஆகஸ்ட் 14ஆம் தேதி பிறப்பித்தது.

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் லட்சக்கணக்கான தெரு நாய்கள் இருக்கும் நிலையில், அவைகள் அனைத்தையும் எட்டு வாரங்களுக்குள் தங்குமிடங்களுக்கு மாற்றுவது என்பது இயலாத காரியம். போதிய தங்குமிட வசதிகள் இல்லை. தெருவில் வாழும் நாய்களை திடீரென அடைத்து வைப்பது, அவைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். அவைகளின் சுதந்திரத்தை பறிப்பதுடன், அவைகளுக்கு உணவு, நீர் மற்றும் மருத்துவ பராமரிப்பு கிடைப்பதையும் கேள்விக்குள்ளாக்கும் என விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெரு நாய்களுக்கு எதிராக நிலவும் அச்சம் மற்றும் தவறான புரிதல்களை நீக்க, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இன்று சென்னையில் போராட்டம் நடத்தியவர்கள் வலியுறுத்தினர்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.