மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள முக்திதம் கோவில் அருகே சாலையைக் கடக்க முயன்ற இரு பெண்கள் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி, மற்றொரு கார் மற்றும் இரண்டு ஆட்டோக்கள் மீதும் மோதியது.
இதில், சுனிதா வாக்மரே (50) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த அவரது கர்ப்பிணி மகள் ஷீத்தல் கேதரே (27) படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த ஷீத்தல், தாயுடன் வெளியே சென்றபோது இந்த விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஷீத்தலின் குழந்தை வயிற்றிலேயே பிறக்காத நிலையில் நேற்றிரவு உயிரிழந்தது.
தொடர்ந்து, ஷீத்தலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளனர். தற்போது இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.