மதுரையில் இன்று நடைபெறும் த.வெ.க.மாநாட்டுக்கு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் சார்பில் 2 ஆயிரம் பேரும், காவல்துறை சார்பில் 3 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தமிழக வெற்றிக்கழககட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது.
இதற்காக மதுரை பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.மாநாட்டு மேடையின் உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில், சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ‘ரேம்ப் வாக்’ நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது.
மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
விஜய் மேடையில் நடந்து வரும்போது, முதல் அடுக்கில் பவுன்சர்கள், 2-வது அடுக்கில் போலீசார் என இரண்டடுக்கு பாதுகாப்பு ஏற்பாடும் உள்ளது.
மாநாட்டு திடலில், 200-க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நிலத்திற்கு அடியில் சுமார் 8 ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு பைப்புகள் பதிக்கப்பட்டு உள்ளன. நிறைய குடிநீர் நல்லிகள் அவற்றில் பொருத்தி இருப்பதால், எந்த இடத்தில் இருந்தும் குடிதண்ணீர் பெறும் வகையில் வசதி உள்ளது.
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் சென்னையில் இருந்து நேற்று மதியம் காரில் புறப்பட்டார். இரவு 7 மணியளவில் மதுரை சென்றடைந்தார்.
பின்னர், சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். தொடர்ந்து அவர், பாரபத்திக்கு வந்து, மாநாட்டு பணிகளை பார்வையிட்டார்.
பெண்கள் அதிக அளவில் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பதால், அவர்களை வழிநடத்தும் வகையில் 50 பெண் பவுன்சர்கள் உள்பட 550 பவுன்சர்கள் நேற்று கேளராவில் இருந்து வந்தனர். மாநாட்டில் பங்கேற்க இரவு முழுவதும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.