திரிபுராவில் உதய்பூர் ரயில் நிலையம் அருகே காரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தில் இரு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை, சிறுமி தனது இரண்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் திரிபுரேஸ்வரி கோயிலுக்கு சென்றிருந்தார். பின்னர், அவர்கள் சிறுமியை காரில் அழைத்து உதய்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்றனர்.
அந்தப் பயணத்தின் போது, காரில் இருந்த இருவரும் சிறுமியை கூட்டு வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரவு 10 மணியளவில் மூவரும் திரும்பி வந்தபோது, கக்ராபன் சோதனைச் சாவடியில் அவர்கள் நிறுத்தப்பட்டனர். அப்போது சிறுமி தன்னிடம் நடந்த துயரத்தை வெளிப்படுத்தியதால், சம்பவம் உடனடியாக வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் மூவரையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் இன்று அளித்த புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரும் கைது செய்யப்பட்டனர். குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காரை தடயவியல் குழுவினர் ஆய்வு செய்து சான்றுகளை சேகரித்தனர்.
மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் சம்பவம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.