சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்பனை செய்த பெற்றோர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் ராமாபுரம் ஆஞ்சநேயர் கோவில் ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதி சந்தோஷ்-சிவகாமி. இந்த தம்பதிக்கு கடந்த 9-ந் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தையை தேவராஜ் என்பவரது உதவியுடன் ரஞ்சித் என்பவருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு அந்த தம்பதி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சந்தோஷ், சிவகாமி தம்பதி கடந்த 14-ந் தேதி ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக போலி மருத்துவ அறிக்கை வைத்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து இந்த தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை விற்பனை செய்தது குறித்து சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து மகுடஞ்சாவடி போலீசார் கடந்த 20-ந்தேதி சந்தோஷ் வீட்டுக்கு நேரில் சென்றனர்.
அப்போது அவர்களது வீடு பூட்டி இருந்தது. இதனால் போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில் அந்த தம்பதிக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததும், அதை விற்பனை செய்து விட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் பெண் குழந்தையை விற்பனை செய்த சந்தோஷ், சிவகாமி, தேவராஜ், ரஞ்சித் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.