தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா பாட்டியா, தற்போது பிரபல சோப்பான மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில், அவருக்கு ரூ. 6.2 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு சட்டப்பேரவையில் உறுதி செய்துள்ளது.
தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான “ரெய்டு 2” மற்றும் “ஒடேலா 2” திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் “அரண்மனை 4” ஆகும்.
தமன்னாவை விளம்பரத் தூதராகத் தேர்வு செய்த முடிவு, கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல கன்னட அமைப்புகள் மற்றும் சமூக வலைதளங்களில், “கர்நாடகாவில் திறமை மிக்க நடிகைகள் குறைவா? ஏன் உள்ளூர் நடிகைகளை புறக்கணிக்கிறார்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாநில அமைச்சர் எம்.பி. பாட்டில்,
“மைசூர் சோப்பை கர்நாடக மாநிலத்துக்கு அப்பாலும் தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே தமன்னாவை பிராண்ட் தூதராக தேர்வு செய்தோம்” என்று விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் விவாதம்
பாஜக உறுப்பினர் சுனில் குமார், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு மாநில அரசு பதிலளித்தபோது,
கடந்த 2 ஆண்டுகளில் மைசூர் சோப்பின் விளம்பரத்திற்காக மட்டும் ரூ. 48 கோடி 88 லட்சம் செலவிடப்பட்டதாகவும்,அதில் தமன்னாவுக்கு ரூ. 6.2 கோடி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
கர்நாடக அரசு, இந்த முடிவின் மூலம் மைசூர் சாண்டல் சோப்பின் சந்தை விரிவாக்கம் மற்றும் தேசிய, சர்வதேச அளவில் பிராண்ட் அடையாளத்தை வலுப்படுத்தும் நோக்கம் உள்ளதாக தெரிவித்துள்ளது.