இன்றைய காலகட்டத்தில் ஒரு நல்ல வேலையை தேர்வு செய்வது என்பது வெறும் பட்டம் பெறுவதால் மட்டுமல்ல. அந்த வேலையில் வளர்ச்சி வாய்ப்பு, நிலைத்தன்மை மற்றும் ஈர்க்கக்கூடிய சம்பளமும் அவசியம். இதனால் தான் இன்றைய இளைஞர்களிடையே அதிகம் பேசப்படும் இரண்டு துறைகள் கோடிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகும்.
தொழில்நுட்ப உலகின் முதுகெலும்பாக கருதப்படும் கோடிங், இணையதளங்கள், மொபைல் ஆப்கள், மென்பொருள்கள், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், வீடியோ கேம்கள் என அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது. இந்தத் துறையில் வேலை பெற விரும்புவோர் C++, Java, Python போன்ற புரோகிராமிங் மொழிகளையும், HTML, CSS, JavaScript போன்ற இணைய மேம்பாட்டு திறன்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். கோடிங் துறையில் தொடக்க நிலை பணிகளில் வருடத்திற்கு ரூ. 4 முதல் 8 லட்சம் வரை சம்பளம் கிடைக்கிறது. அனுபவமிக்க நிபுணர்களுக்கு ரூ. 30 முதல் 50 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள், ஃபின்டெக் உள்ளிட்ட துறைகளில் கோடிங் நிபுணர்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது.
மறுபுறம், வேகமாக வளரும் துறை டிஜிட்டல் மார்க்கெட்டிங். ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை அல்லது சேவைகளை ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய பணி. SEO, சமூக ஊடக மார்க்கெட்டிங், Google Ads, Facebook Ads, உள்ளடக்க மார்க்கெட்டிங், மின்னஞ்சல் மார்க்கெட்டிங் போன்ற திறன்கள் இத்துறையில் அவசியம். தொடக்க நிலையில் வருடத்திற்கு ரூ. 3 முதல் 5 லட்சம் வரை சம்பளம் கிடைக்கிறது. அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் ரூ. 20 முதல் 30 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். மேலும், ஃப்ரீலான்சிங், அஃபிலியேட் மார்க்கெட்டிங், சொந்த ஏஜென்சி தொடங்குதல் போன்ற வழிகளிலும் அதிக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதனால், டெக்னாலஜி மற்றும் லாஜிக் மீது ஆர்வமுள்ளவர்களுக்கு கோடிங் சிறந்த தேர்வாகும். படைப்பாற்றல் மற்றும் மார்க்கெட்டிங் மீது ஆர்வமுள்ளவர்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. இரண்டு துறைகளிலும் நல்ல சம்பளமும், எதிர்கால வளர்ச்சியும் உறுதியாக இருப்பதால், இளைஞர்கள் தங்களின் திறமை மற்றும் ஆர்வத்துக்கு ஏற்ற துறையைத் தேர்வு செய்வதே முக்கியம்.