பல்லாவரம் சாலையில் 04 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்: போக்குவரத்துக்கு தடை: பாதாள சாக்கடை திட்டப்பணி நிறைவடைந்த இடத்தில் இப்படியா..?
Seithipunal Tamil August 25, 2025 08:48 AM

சென்னை, பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் சாலையில் திடீரென 04 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்த நிலையில், பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட்டுள்ளது.

இதன் காரணமாக அவ்வழி யாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் எந்த நேரத்திலும் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்துவிடுவோமோ என்ற பயத்துடன் பயணம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணி நிறைவடைந்தது. அதன் பின்னர், இந்த இடத்தில் முறையாக மண் போட்டு மூடாமல், வேலை செய்து சென்றதன் விளைவாக இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி செல்லும் குழந்தைகள் இந்த சாலையை பயன்படுத்தி வருவதால், எந்த நேரத்திலும் விபத்து ஏற்படலாம் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அத்துடன், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு போன்ற வாகனங்கள்கூட இந்த சாலையில் உடனடியாக பயணிக்க முடியாத நிலையில் உள்ளது.  இதனை கருத்தில் கொண்டு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சரிசெய்து தர வேண்டும் என்றும்,  மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.