காதல் திருமணம் செய்வோர் பாஜக அலுவலகத்திற்கும் வரலாம் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிபட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்தும் 51வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு கடந்த இரு தினங்களாக துப்பாக்கி சூடு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் வீராங்கனைகளுக்கு பதக்கங்களை அவரவர்கள் கழுத்தில் அணிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இந்து மதத்தின் மிகப்பெரிய பிரச்சனை சாதி பிரச்சனைதான் காதல் திருமணம் செய்வோர் பாஜக அலுவலகத்திற்கும் வரலாம். ஆணவப் படுகொலைக்கு எதிராக தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். பாஜக தொண்டர்கள் உயிரை கொடுத்து வேலை செய்வது போல் அதிமுக தொண்டர்களும் பாஜகவுக்காக வேலை செய்ய வேண்டும். அண்ணாமலை பாஜகவின் தொண்டன். இக்கட்சியில் எனக்கு நிறைய கருத்துவேறுபாடு இருந்தாலும், தலைமை கருத்துக்கு கட்டுப்படுவேன். அதுவே தொண்டனுக்கு அழகு” என்றார்.