அமெரிக்கா, இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் மீது புதிய வரிகளை விதித்ததற்கு, கமல்ஹாசன் எம்பி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வரிகளை அவர் "புதிய ஏகாதிபத்திய கருவி" என்று வர்ணித்ததுடன், உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன், தனது எக்ஸ் பக்கத்தில், "எக்காளங்களும், வரிகளும், பேரரசுகளும் - அனைத்தும் ஒலி எழுப்புபவை, ஆனால் தற்காலிகமானவை. இந்தியா யாருக்கும் தலை வணங்காது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் எழுச்சியை 1925-ஆம் ஆண்டு வெளியான ஒரு கார்ட்டூனையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று, மேற்கத்திய நடைமுறை அரசியலில், தண்டனை என்பது கொள்கையாக வேடமிடுகிறது என்பதை அமெரிக்கா மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளது. பல நூற்றாண்டுகளாக, ஏகாதிபத்தியத்தின் சுரண்டல்களை இந்தியா தாங்கிக்கொண்டது, ஆனால் நாம் உடைந்து போகவில்லை," என்று கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம், இந்தியா தனது எரிசக்தி தேவைகளை உறுதிப்படுத்த துணிந்ததால், வரிகள் இப்போது "புதிய ஏகாதிபத்திய கருவியாக", "மறைமுகமான பொருளாதாரத் தடைகளாக" பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய ஏற்றுமதியாளர்கள் மீது விதிக்கப்பட்ட 50% வரிகள், வர்த்தகம் அல்லது உக்ரைன் தொடர்பானவை அல்ல, மாறாக இந்தியாவின் உறுதியைக் குலைக்க பயன்படுத்தப்படும் ஒரு "அரசியல் தடி" என்று கமல்ஹாசன் வாதிட்டார். முக்கிய விநியோக சங்கிலிகளில் சீனா சுயசார்பை அடைந்துள்ள நிலையில், அதன் மீது விதிக்கப்படும் வரிகள் "கிசுகிசுப்புகளாகவும், அரை மனதுடனும்" விதிக்கப்படுகின்றன, ஆனால் இந்தியாவின் மீது "சுத்தியல் கொண்டு தாக்குவது போல்" வரிகள் விதிக்கப்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார். மகாத்மா காந்தியின் தற்சார்பு கொள்கை வெறும் கோஷம் அல்ல என்றும் அவர் கூறினார்.
திருப்பூர், சூரத், நொய்டா, ஆந்திரப் பிரதேசத்தின் இறால் விவசாயிகள், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ரத்தினங்கள் மற்றும் நகை தொழிலாளர்கள் மற்றும் நாட்டின் எஃகு தொழிலாளர்களுக்கு அவர் தனது ஆதரவை தெரிவித்தார். மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அவர் முன்வைத்த கோரிக்கைகள் என்னவெனில் இரண்டு ஆண்டுகளுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) கடன் தவணைகளுக்குத் தற்காலிகத் தடை. அவசர கடன் உதவி மற்றும் ஏற்றுமதி கடன் விரிவாக்கம்.
நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் பிற வரி திரும்ப பெறும் தொகைகளை உடனடியாக வழங்குதல். புதிய சந்தைகளை அணுகுவதற்கு சரக்கு ஆதரவு மற்றும் தற்காலிக மின் கட்டணச் சலுகைகள். செயற்கை நூல்களுக்கான இறக்குமதி விதிமுறைகளைத் தளர்த்துதல். ஏற்றுமதி விதிமுறைகள் மற்றும் தொகையைத் திரும்பப் பெறுவதற்கு ஒற்றைச் சாளர முறை.
இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Edited by Siva