ஹரியானா மாநிலத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2100 நிதி உதவி வழங்கும் "லாடோ லட்சுமி யோஜனா" என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார்.
தீன் தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளான செப்டம்பர் 25 முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என்றும், 23 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைத்துப் பெண்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதற்கட்டமாக, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. எதிர்காலத்தில், வருமான பிரிவுகள் விரிவாக்கப்படும் என்றும், திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் என அனைவருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு குடும்பத்தில் எத்தனை பெண்கள் இருந்தாலும், அனைவருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். உதாரணமாக, ஒரு குடும்பத்தில் மூன்று பெண்கள் தகுதியுடையவர்களாக இருந்தால், மூவரும் இந்தத் திட்டத்தின் பலனை பெறுவார்கள்.
திருமணமாகாத பெண்கள் அல்லது திருமணமான பெண்கள் என்றால் அவர்களின் கணவர் ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளாக ஹரியானாவில் வசித்திருக்க வேண்டும். இந்தத் திட்டம், ஹரியானா மாநில பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு, பொருளாதாரரீதியாக அவர்களை சுதந்திரமடைய செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran