கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவக்குழுவின் பரிந்துரைப்படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதோடு, 48 மணி நேரத்தில் அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் நல்லக்கண்ணுவுக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டதை அடுத்தும் அவருக்கு மீண்டும் செயற்கை சுவாசம் அளித்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு சென்று நல்லக்கண்ணு அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கடந்த 48 மணி நேரத்தில் உடல் நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு, அவரின் உறவினரை அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தார். மீண்டும் அவர் உணவுக் குழாயில் அடைப்பு காரணமாக மூச்சு பிரச்சனை ஏற்பட்டது. அதனால் மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மக்களிடம் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க தனி மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.