வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நான் நீண்ட நாட்களாக வாங்க எத்தனித்து வாங்காமல் இருந்த புத்தகத்தை, என் கணவர் எங்களது திருமண நாளில் பரிசளித்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆதலால் மிகுந்த ஆர்வத்தோடு வெகு விரைவில் இரு தொகுதிகளையும் வாசித்து முடித்தேன்.
நாவலின் முதல் அத்தியாயத்தில் இருந்தே நம்மை வியக்க வைக்கிறார் ஆசிரியர். நாவல் பழ வகைகளும் அதன் சுவைகளும், தனை மயக்கி மூலிகை, காக்க விரிச்சி, கொல்லி காட்டு விதை, யானை அஞ்சும் யாளி மிருகம், நாக்கறுத்தான் புல், சந்தன வேங்கை, ஏழிலை பாலை, சோம பூண்டு பணம், நகங்களின் வகைகளும் அதன் நகர்வுகளும், பற்றி எறியும் பால் கொறண்டி, வெற்றி இலை பெயர்க்காரணம் என ஒன்று இரண்டு வியப்புகள் அல்ல அடுக்கிக்கொண்டே போகலாம். பறம்பின் மானுடர்கள் மட்டுமல்ல, அங்கிருக்கும் ஒவ்வொரு செடி கொடிகளும், ஒவ்வொரு உயிரினங்களும் நம்முள் ஏற்படுத்தும் ஆச்சர்யங்களுக்கு அளவில்லை.
பறம்பு மலை மட்டுமல்லாமல், மற்ற நிலங்களின் பெருமையையும் கூறும் விதம் அற்புதம். மாமதுரையின் பெரு விழா பற்றி சொல்லும் போது, பொதியவெற்பன் மற்றும் பொற்சுவையின் மன விழாவுக்காக மதுரை பூண்ட திருக்கோலத்தை வாசிக்கும் போது, நாமும் அதில் ஒருவராகவே இருந்து வாழ்ந்து வந்தோம்.
குறிப்பாக, கலை மற்றும் ஓவிய நுணுக்கங்களை பற்றி கூறிய அழகில், நம்முடைய கற்பனை அளப்பரியதாகிவிடுகிறது. வேனிற்கால பள்ளியறை, கார்கால பள்ளியறை, பண்டாரங்கத்தின் ஓவியங்கள் என்றும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன. காமன் விளக்கு கற்பனைக்கும் எட்டாத ஒரு பரிசு என்றே கூறலாம். நெருஞ்சி பூவை ஞாயிறு விரும்பியாக சொல்வது புதுமை.
உண்மையில் எது கற்பனை எது நிஜம் என்பதனை மனம் உய்த்தறிய மறுக்கிறது. இது ஆசிரியருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அவரின் எழுத்துக்களுக்கு என்றும் தலை வணங்குகிறோம்.
வேல்பாரியின் ஒவ்வொரு பக்கத்தை புரட்டும் போதும், அதில் என்ன ஆச்சர்யம் இருக்கும் என்பதைக் காண மனம் ஏங்குகிறது. நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் நம்மை வியக்க வைக்கும் ஒரு செய்தியை ஆசிரியர் சொல்கிறார்.
நீலன்தொடங்கி, உதிரன், பழையன், கூழையன், மயிலா, ஆதினி, அங்கவை, தேக்கன், சூளிவேல், இரவாதன் போன்ற எண்ணற்ற பாத்திரங்களின் ஊடே நம் பறம்பில் பயணிக்கிறோம். ஒவ்வொரு பயணமும் நமக்கு ஒவ்வொரு அனுபவங்களை தர வல்லது. அவ்வாறு நம் பறம்பில் பெற்றது அனுபவம் மட்டுமல்ல, நம் மண்ணின் வீர வள்ளலை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறோம். சிறு செடி கொடியில் இருந்து பெரிய பெரிய உருவங்கள் வரை, எல்லா உயிர்களையும் நேசித்து காத்தவன் நம் வேள்பாரி.
நிலவெறி கொண்ட வேந்தர்கள் வாழ்ந்த காலத்தில், இயற்கை மீதும் வெறி கொண்ட ஒருவன் உண்டு என்றால் அது நம் வேள்பாரி தான் என்று கூறினால் அது மிகையாகாது.
காதல் நட்பு காமம் பகை என்று எல்லா கோணங்களை சொன்னாலும், என்னை மிகவும் கவர்ந்தது நம் தலைவன் பாரி தான்.
கபிலர் மற்றும் பாரி இருவருக்கும் இருக்கும் நட்புக்கு, இன்றும் அழியாச் சான்றுகள் இருக்கின்றன. கபிலர் பறம்பு நாடு வருவதற்காக ஏங்குகிறான் பாரி. கபிலரை முதலில் சந்தித்த கணத்தில், அவரை தன் தோள் மீது சுமந்து செல்ல அனுமதி கேட்கும் போது அறிமுகமாகும் இவ்விருவரையும் இணை பிரியா நண்பர்களாக மாற்றுவது நட்பு. பின் கபிலருக்காக அறுபதாங்கோழி, எலிமயிர் போர்வை, வண்டுக்கடி மரபட்டை என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் பாரியின் அன்புக்கு இணை எதுவும் இல்லை. கார்த்திகை மாத பெயர் காரணத்தை கூறத் தொடங்கி, வள்ளி முருகனின் காதலை கபிலரிடம் கூறும் போது, நம்மை அறியாமலேயே மனம் முருகனிடம் ஒன்றி விடுகிறது. ஒரு நாள் உங்களின் வானமே நாங்களாக இருப்போம் என்று பாரி கூறுவது நட்பின் ஆழத்தை அழகாக உருவகப்படுத்துகிறது.
எந்த மதுவிற்கு எந்த கறி சுவையை கூட்டும் என்பதை அறிந்து , அதில் சிறந்ததை கபிலருக்கு கொடுக்க நினைக்கும் இடத்தில் பாரியின் விருந்தோம்பலை காண்கிறோம்.
மூவேந்தர்களின் பிடியில் இருக்கும் நீலனை, கபிலருக்கு தன் தாயின் நினைவை ஊட்டிய நீலனை, சந்திக்க சென்ற தன் உயிர் தோழனை, நீண்ட நேரம் காக்க வைப்பதை பொறுக்க முடியாமல் பாரி கோபம் கொள்வான் என எண்ணும் கபிலர், பாரியின் மனதை நன்கு அறிந்தவர் ஆகிறார்.
ஆயுத உதவி பெற பொதினி மலை சென்ற பாரி, மருத்துவ குலமகளை தன் காதல் மனைவியாக்கி எவ்வியூர் அழைத்து வருவது வியப்பு. தனக்கு என்ன வேண்டும் என்பதை, ஆதினி மூலம் பாரி அறிவது, பறம்பின் தேவையே ஆதினி தான் என்று பாரி உணர்வது தான் அவர்களுக்குள்ளான காதலை அழகாய் உணரவைப்பது.
சிறகு நாவலை காட்டிய ஆதினிக்கு இராவெறி மரத்தை காட்ட அழைத்து செல்வது ஆதினிக்கு தரும் காதல் பரிசு.மனைவியிடம் தோற்று மகளை வெற்றி பெற வைக்கும் போது, ஒரு ஆண் தாய்மையை உணர்கிறான் என்று பாரி கூறுவது அவனின் பாசத்திற்கு எடுத்துக்காட்டு.
எண் திசைகளிலும் கவனம் கொண்டு அஞ்சா நெஞ்சம் கொண்ட பாரி, தன் தசை நெருப்பில் இறங்கியதும் துடித்து போகிறான். தான் மகளின் இணையை சோதிக்க , எலி வேட்டையின் போது உடன் சென்று அறிவது அறிவார்ந்தோர் செயல்.
தெய்வ வாக்கு விலங்குக்காக வைப்பூருக்கே தீ வைத்து, தான் முன்னோர்களான திரையர்களை காப்பாற்றியது பாரியின் வீரத்திற்கு எடுத்துக்காட்டு
தேவாங்குக்காக, திரையர்களை பறம்பிற்கு எதிராக செயல் பட வைத்த வேந்தர்களை தோற்கடித்து திரையர்களை மீட்டு நம்பிக்கை ஊட்டிய காவலன் பாரி.
காலம்பனுக்கு நம்பிக்கை ஊட்ட, தன் காதல் திருமணத்தையும் வெண்சாரைகளின் நிழலில் நடந்த தங்கள் காமத்தையும் முல்லைக்காக தான் தேரை தந்ததை கூறும் போதும் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஒளிர்கிறான் பாரி.
மூவேந்தர்களுடன் போர் புரியும் போது பாரியின் போர் யுக்திகள் கற்பனைக்கும் எட்டாதவை.
எதிர் நின்று போர் புரிந்தாலும், திசை வேழருக்கும், கபிலரின் சிறந்த மாணவியான பொற்சுவைக்கும் இறுதி சடங்குகள் செய்து வைக்கும் மரபு தவறா தலைவன் பாரி.
வேந்தர்கள் பற்பல காரணங்களுக்காக அளித்த பல குல மக்களுக்கு, மறு வாழ்வுண்டு என்று நம்பிக்கை ஊட்டியவன் பாரி. அந்த மக்களை எல்லாம் தன் சொந்தமாக பாவித்து அன்பு காட்டி காத்து வந்தவன்.
காலங்களை பற்றி துல்லியமாக கணித்தறிந்து, அதன் அடிப்படையில் நாட்களை நகர்த்தி செல்லும் குறிஞ்சி மக்களின் தலை சிறந்த தலைவன்.
தான் நாட்டையும் நாட்டு மக்களையும் தன்னை விட எவராலும் நேசிக்க முடியாது என்பதை சொல்லாமல் சொல்லியவன் வேள்பாரி.
குல வழக்கங்களை விட மனிதர்களே முக்கியம் என்பதை காட்ட, மதங்கன் கேட்டான் என்பதற்காக கொல்லி காட்டு விதைகளை அள்ளிதந்தவன் வள்ளல் பாரி. பாடி வந்த பாணர்களுக்கு அவர்கள் வேண்டும் பொருள் தந்து மன நிறைவோடு விருந்தளிப்பவன் பாரி.
இயற்கை தான் எங்களை வாழ வைக்கிறது. இயற்கை வழங்கும் கொடையில் வாழும் எங்களுக்கு வணிகம் தேவை இல்லை; நாங்கள் ஆள்பவர்கள் இல்லை இயற்கையால் ஆளப்படுபவர்கள் என்று கூறும் போது இயற்கை காதலன் ஆகிறான் பாரி.
மண்ணை நீர் ஊடுருவதுபோல மனங்களை ஊடுருபுபவன் வேள்பாரி என கபிலர் வியக்கிறார். ஆனால், உண்மையில் மனங்களை மட்டுமல்ல உயிர் வரை சென்று, தன் மீது தீராக்காதலை விதைப்பவன் பறம்பின் தலைவன்.
கபிலருடனேயே நாம் பறம்பில் பயணித்தாலும், அவரை விட நமக்கே ஆச்சரியங்களும் வியப்புகளும் குறைந்தபாடில்லை. இந்நாவலில் வரும் அனைத்து செய்திகளையும் தகவல்களையும் ஒவ்வொன்றின் பெயர் காரணங்களையும் மனம் உண்மை என்றே இன்றளவும் நம்புகிறது.
இவண்
சரண்யா
திருப்பூர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ