அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 50% வரை சுங்க வரி விதித்துள்ள நிலையில், இந்த வர்த்தக போரை சமாளிக்க இந்தியா ஒரு விரிவான சூப்பர் திட்டத்தை வகுத்துள்ளது. இந்த திட்டம் குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை உள்ளடக்கியது. இந்த மூன்று கட்ட திட்டத்தின் மூலம், இந்தியா அமெரிக்காவுடனான வர்த்தக சிக்கல்களை தீர்ப்பதோடு, தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
1. முதல் கட்டம்: உடனடியாக மாற்று ஒப்பந்தங்கள்
இந்தியாவின் வர்த்தக துறை அமெரிக்க சந்தையை மட்டுமே சார்ந்து இருக்க கூடாது என்பதே இந்த திட்டத்தின் முதல்படி. இதற்காக, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்தியா புதிய வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளும். இந்த ஒப்பந்தங்கள், அமெரிக்காவால் ஏற்படும் வர்த்தக இழப்பீடுகளை ஈடுகட்ட உதவும். இந்திய அரசு ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதிகள் பல்வகைப்படுத்தப்பட்டு, எந்த ஒரு தனிப்பட்ட சந்தையையும் சார்ந்திருக்கும் நிலை குறையும்.
2. இரண்டாம் கட்டம்: உள்நாட்டு சந்தையை வலுப்படுத்துதல்
இது ஒரு நீண்ட கால திட்டமாகும். இந்தியா தனது உள்நாட்டு சந்தையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும். “தொழில் புரிவதை எளிதாக்குதல்” (Ease of Doing Business) என்ற கொள்கையின் மூலம், அரசு கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்துதல், புதிய தொழில்களை தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் உள்ள நடைமுறைகளை சீரமைத்தல் போன்றவை இதில் அடங்கும். உள்நாட்டு தொழில் வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரிக்கும்போது, வெளிநாட்டு சந்தைகளை சார்ந்திருப்பது கணிசமாக குறையும். இது இந்திய பொருளாதாரத்திற்கு நீண்ட கால நிலைத்தன்மையையும், பாதுகாப்பையும் வழங்கும்.
3. மூன்றாம் கட்டம்: புவிசார் அரசியல் நிலைப்பாட்டில் தெளிவு
மூன்றாவது மற்றும் இறுதிப்படி, இந்தியாவின் நீண்ட கால புவிசார் அரசியல் வியூகத்தை குறிக்கிறது. மற்ற நாடுகளின் சிக்கலான அரசியல் விவகாரங்களில் சிக்கிக்கொள்ளாமல், இந்தியா தனது சொந்த வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த திட்டம் பரிந்துரைக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், மற்ற நாடுகளின் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்படாத வகையில், ஒரு வலிமையான, தற்சார்பு கொண்ட நாடாக இந்தியா வளர வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம். இந்த வியூகம், உலக அரங்கில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதோடு, புதிய சவால்களை எதிர்கொள்ளவும் உதவும்.
இந்த சூப்பர் திட்டத்தின் மூலம், அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளை சமாளித்து, உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு தனித்துவமான மற்றும் வலிமையான இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
140 மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, அதிலும் இளைஞர்கள் உள்ள ஒரு நாட்டை அமெரிக்கா பணிய வைக்கலாம் என்றால் அது கனவில் கூட நடக்காது. அமெரிக்காவில் உள்ள இந்திய இளைஞர்கள் மட்டும் அந்நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தால் அமெரிக்கா ஜீரோவாகிவிடும் என்பதை டிரம்ப் மறந்து பைத்தியக்காரத்தனமாக நடந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
Author: Bala Siva