வைகை ஆற்றில் மனுக்கள்- திமுகவிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?- அன்புமணி
Top Tamil News August 30, 2025 06:48 AM

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட  உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் அரசை நம்பி  அளித்த கோரிக்கை மனுக்களுக்கு திமுக அரசு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறது என்பதற்கு இதுவே சான்று ஆகும்.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்ட போதே, இது ஊரை ஏமாற்றும் திட்டம் என்பதையும்,  இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பதையும் காரண, காரியங்களுடன்  விளக்கியிருந்தேன்.  உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட  மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டிருப்பதன் மூலம் அப்போது நான் முன்வைத்த குற்றச்சாட்டுகள்  உண்மை என்பது உறுதியாகியிருக்கிறது.

ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் எதையும் செய்யாமல் இருந்து விட்டு, இப்போது புதிய புதிய திட்டத்தை செயல்படுத்துவதாக திராவிட மாடல் அரசு நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.  மக்களை முட்டாள்களாக்க நினைப்பவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.