திருப்பூர் ரயில்வே நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பெண் ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து, அங்கிருந்த ரயில்வே பெண் போலீஸ் திவ்யா ஒடி வந்துள்ளார். பின்னர் பிளாட்பார இடைவெளியில் கீழே விழுந்த அவரை, ரயில் நிற்கும் வரை, மேலே எழுந்திருக்காமல் அசையாமல் படுத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி படுத்திருந்த சுசீலாவை, ரயில் நின்றதும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இன்று (ஆகஸ்ட் 29) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் ரயில், அதிகாலை திருப்பூர் வந்துள்ளது. அப்போது அந்த ரயில், முதலாவது பிளாட்பாரத்தில் நின்று கிளம்பும் நேரத்தில் திருப்பூரை சேர்ந்த சுசிலா(58) என்ற பெண், தனது பேத்தியுடன் இறங்க முயன்று தவறி விழுந்துள்ளார். ஆனால், ரயில் வேகமாக சென்றதால், அவர் பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் விழுந்துள்ளார்.
ரயிலும் இருந்து, பெண் ஒருவர் விழுந்ததை பார்த்த பயணி ஒருவர் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தியுள்ளார். உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சுசிலாவை வெளியே தூக்கியுள்ளார். அவரை உயிருடன் காப்பாற்றிய திவ்யாவுக்கு பயணிகள் மற்றும் சக போலீசார் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.