முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து..!
Seithipunal Tamil August 30, 2025 09:48 AM

அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்டு வந்த ரகசிய சேவை பாதுகாப்பை டொனால்ட் ட்ரம்பின் அரசு திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில், டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்க சட்டப்படி, பதவி விலகிய துணை அதிபருக்கு ஆறு மாதங்கள் வரை ரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்படும். அதேபோன்று அந்நாட்டின் அதிபராக இருந்தவருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். ஆனால், பைடன் ஆட்சி காலத்தில் முன்னாள் துணை அதிபர்களுக்கான பாதுகாப்பு மேலும் 06 மாதங்களுக்கு நீட்டிக்கும் வகையிலான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

2025-ஆம் ஆண்டு ஜனவரியில் பதவி விலகிய கமலா ஹாரீசுக்கு இந்த பாதுகாப்பு ஜூலையில் காலாவதியாகியுள்ளது. இதனையடுத்து இந்த பாதுகாப்பை விலக்கி கொள்வதற்கான உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டதாக டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அத்துடன், கடந்த ஆண்டு, டிரம்ப்பை கொலை செய்வதற்கு இரண்டு சதித் திட்டங்கள் நடந்த நிலையில், அதனை ரகசிய சேவைப்பிரிவினர் முறியடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.குறித்த ரகசிய சேவை பாதுகாப்பு அதிபர்களை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.