'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்களை ஆற்றில் வீசியவர்கள் மீது திருப்புவனம் வட்டாட்சியர் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய பயனாளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். எனவே, பொதுமக்கள் முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மக்கள் வழங்கும் மனுக்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், இதுவரை நடந்த முகாம்கள் மூலம், லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிவகங்கை அருகே கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பூர்த்தி செய்யப்பட்டு அலுவலர்களிடம் வழங்கப்பட்ட மனுக்கள், வைகை ஆற்றில் தூக்கி எறியப்பட்டு, அதுதொடர்பான வீடியோ வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்களை ஆற்றில் வீசியவர்கள் மீது திருப்புவனம் வட்டாட்சியர் புகார் அளித்துள்ளார். மனுக்களை ஆற்றில் வீசியவர்களை கண்டுபிடித்து தர கோரி காவல்நிலையத்தில் திருப்புவனம் வட்டாட்சியர் புகார் அளித்துள்ளார். மேலும் ஆற்றில் வீசப்பட்ட மனுக்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டதாக திருப்புவனம் வட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.