ஆடுகள் மோதிக்கொள்ளட்டும்.. இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் காத்துக்கிடக்கின்றன..சசிகலா ஓபன் டாக்!
Seithipunal Tamil August 31, 2025 12:48 AM

தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் சூழலை உருவாக்கி விடக்கூடாது என்றும் அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என சசிகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் ,தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் நம் இருபெரும் தலைவர்களின் தலைமையில் சிறப்புடன் செயலாற்றி வந்துள்ளது.

 சுமார் 35 ஆண்டுகளாக கழகத்தை கட்டி காப்பாற்றி, சேதாரமின்றி வளர்த்தெடுத்து, 6 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்று அனைத்துத் தரப்பு மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று நல்லதொரு ஆட்சியை வழங்கியவர் நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா.

 "இன்னும் 100 ஆண்டுகளையும் கடந்து மக்களுக்காகவே நம் இயக்கம் இயங்கும்” என்று தம் புரட்சித்தலைவி சட்டப்பேரவையிலேயே குளுரைத்தார்.

ஆனால் இன்று நிலைமை வேறாக உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கம், இன்றைக்கு எவனமாக பேசும் அளவுக்கு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. 

கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து நம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக் கூடிய சூழலை நாம் உருவாக்கி விடக்கூடாது. அதனால்தான் கழகம் ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். எனக்கு எந்த சுயநலமும் கிடையாது மக்கள் நலத்தை மட்டுமே எப்பொழுதும் நான் சிந்திக்கின்றேன்.

கழகம்தான் எனது ஒரே குடும்பம். யாராலும் என்னை ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது. 
உங்களில் ஒருத்தியாக உங்களின் சகோதரியாக இருந்து அனைவருடன் ஒன்றிணைந்து கழகப் பணியாற்றவே நான் விரும்புகிறேன். 

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூட கழகம் வெற்றிபெற என்னால் எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணிதான் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கியிருந்து அமைதி காத்தேன் ஆனால் கழகம் வெற்றியை பெற முடியவில்லை. அதன்பிறகு நடந்த எந்த தேர்தலிலும் கழகம் இன்றுவரை வெற்றி பெறமுடியாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

ஆனால், இதை இப்படியே இனியும் வேடிக்கை பார்ப்பது நம் இருபெரும் தலைவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகிவிடும். 

இது தொண்டர்களின் இயக்கம், தொண்டர்களின் முடிவே இறுதியானது, உறுதியானது. அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கழகத்தை வழிநடத்தி செல்வோம். ஆடுகள் மோதிக்கொள்ளட்டும் என இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் காத்துக்கிடக்கின்றன. அதற்கு நாம் ஒருபோதும் இடம் தந்து விடக்கூடாது.

ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தான் தமிழக மக்களும் கழகத்தொண்டர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை நாம் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். மீண்டும் கழக ஆட்சி அமைவது உறுதி. எனவே கட்சியில் உள்ள முன்னோடிகள் முதல் கடைக்கோடி தொண்டார்கள் வரை ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். வெற்றிக்கான பாதையில் பயணித்திடுவோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.