தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து வந்த போது நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில், நடிகர் விஷால் சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், வரும் ஆகஸ்டு 29-ந்தேதி நல்ல தகவலை சொல்லுவேன் என்றும் தெரிவித்திருந்தார். அதன் படி நேற்று சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால் தெரிவித்ததாவது:- "தொலைப்பேசி வாயிலாகவும், இணைய வாயிலாகவும் எனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி.
இன்னும் இரண்டு மாதங்களில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. நடிகர் சங்க கட்டிடம் திறந்ததும் எங்களின் திருமணம் நடக்கும். பேச்சுலர் வாழ்க்கை நிறைவடைந்ததை தொடர்ந்து, என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரவுள்ளது.
அதிலும் குறிப்பாக சினிமாவில் காதல் படங்களில் நடிப்பேன். ஆனால் முத்தக்காட்சிகளில் இனிமேல் நடிக்க மாட்டேன்." என்று தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த அதிரடி முடிவு, திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியைத் தொடங்கியுள்ளது.