இஸ்ரேல் – காசா மோதல் தொடங்கியதிலிருந்து, துருக்கி மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வரை, இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக துருக்கி கடந்த ஆண்டு மே மாதமே எச்சரித்திருந்தது.
இந்நிலையில், தற்போது இஸ்ரேலுடனான அனைத்து பொருளாதார மற்றும் வணிக உறவுகளையும் முற்றிலுமாக துண்டிக்க துருக்கி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடன், “இஸ்ரேலுடன் எந்த வகையான வர்த்தகமும் இருக்காது. மேலும், இஸ்ரேலிய விமானங்களுக்கு எங்கள் வான்வெளி மூடப்படும்” என தெரிவித்தார்.
அதேபோல் பாராளுமன்ற அமர்வில் பேசிய அவர், “காசா, லெபனான், ஏமன், சிரியா, ஈரான் ஆகிய இடங்களில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், சர்வதேச ஒழுங்கை மீறும் பயங்கரவாத அரசு மனநிலையின் சான்றாகும்” எனக் கடுமையாக விமர்சித்தார்.
ஏற்கனவே கடந்த வாரமே துருக்கி, இஸ்ரேலின் கப்பல்கள் தமது துறைமுகங்களில் தரையிறங்குவதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.