தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது:2023–24 கல்வியாண்டில் அரசுப் பள்ளி சேர்க்கை விகிதம் 42.23% ஆக இருந்தது.2024–25-இல் அது 39.17% ஆகக் குறைந்தது.தற்போது 2025–26 கல்வியாண்டில் அது மேலும் குறைந்து 37.92% ஆக உள்ளது.
தற்போதைய கல்வியாண்டில், தமிழகத்தின் 37,595 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2.39 லட்சமாக இருந்த நிலையில், 12,929 தனியார் பள்ளிகளில் 5.26 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது, தனியார் பள்ளிகளில் சேர்க்கை இருமடங்குக்கும் அதிகம் இருப்பதை காட்டுகிறது என அவர் கூறினார்.
மேலும், பல அரசுப் பள்ளிகளில் கட்டிட வசதிகள் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவது, பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவது, போதிய ஆசிரியர்கள் இல்லாமை, சாதிய வன்முறை அதிகரிப்பு போன்ற காரணங்களால் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் நம்பிக்கை இழந்து தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்வதாகவும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும்,அரசுப் பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட LKG, UKG போன்ற தொடக்கக் கல்வி தற்போது நடைபெறவில்லை.பாடத்திட்டத்தில் அரசியல் சார்ந்த புரட்டுகள் திணிக்கப்பட்டுள்ளன.இதனால் ஏழை குடும்பங்களும் கடன் வாங்கி குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பெருந்தலைவர் காமராஜர் ஆரம்பித்த கல்விப் புரட்சி திமுக ஆட்சியால் பாழடைந்துவிட்டது என்றும், பள்ளிக் கல்வித்துறையை கூட பணம் சம்பாதிக்கும் கருவியாக மாற்றியிருப்பது வெட்கக்கேடு எனவும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.