பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு: கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன..? வெளியுறவுத்துறை அறிக்கை..!
Seithipunal Tamil September 01, 2025 05:48 PM

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சீனா புறப்பட்டார். 07 ஆண்டுகளுக்கு பிறகு  சீனாவுக்கு சென்றுள்ள அவருக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.இதன் போது இருநாட்டு வர்த்தகம்,தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதம், உலகளாவிய பிரச்சினைகள், இந்தியா- சீனா எல்லை
பிரச்சினை, அமெரிக்கா வரிவிதிப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இருதலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் தங்களின் பேச்சுவார்த்தைகளில், பெரும்பாலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியதாகவும், இந்தியா-சீனா எல்லை பிரச்சினைக்கு நியாயமான, மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை நோக்கி செயல்பட ஒப்புக்கொண்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலகளாவிய வர்த்தகத்தை உறுதிப்படுத்த இரு நாடுகளின் பங்கை அங்கீகரித்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்துவதாக இருவரும் உறுதியளித்தனர். அத்துடன், உலக வர்த்தகத்தை நிலைநிறுத்துவதில் இரு நாடுகளின் பங்கை மோடியும், ஜின்பிங்கும் அங்கீகரித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு தலைவர்களும் இருதரப்பு, பிராந்திய-உலகளாவிய பிரச்சினைகள், பயங்கரவாதம் மற்றும் நியாயமான வர்த்தகம் போன்ற பலதரப்பு தளங்களில் சவால்கள் குறித்து பொதுவான நிலையை விரிவு படுத்துவது அவசியம் என்று இரு நாட்டு தலைவர்களும் கருதினர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கைலாஷ் மானசரோவர் யாத்திரை, சுற்றுலா விசா, நேரடி விமானங்கள் மற்றும் விசா வசதி மூலம் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன், அடுத்த ஆண்டு இந்தியா நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு சீன அதிபர் ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மோடியின்  அழைப்புக்கு ஜின்பிங் நன்றி கூறியதுடன் இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்துக்கு சீனாவின் ஆதரவையும்தெரிவித்துள்ளதகா அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.