விருத்தாசலம் அருகே சோகம்... ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி.!
Seithipunal Tamil September 01, 2025 05:48 PM

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே கீழ்ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாஸ்தா-அகஸ்தியா தம்பதியினர். இவர்களுடைய மகள் சிவதர்ஷினி. அதே ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இதேபோல், அதே ஊரை சேர்ந்த வேல்முருகன் மகன் குணா. 

இந்த நிலையில் நேற்று மாலை சிவதர்ஷினி, குணா ஆகிய 2 பேரும் குணாவின் தாயுடன் ஏரிக்கு சென்றனர். அங்கு குணாவின் தாய் மீன்பிடித்துக் கொண்டிருந்ததனால் சிவதர்ஷினியும், குணாவும் ஏரியில் குளித்தபடி விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது 2 பேரும் எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கி மாயமானார்கள். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணாவின் தாய் கத்திக் கூச்சலிட்ட உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து ஏரியில் இறங்கி 2 பேரையும் தேடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.