விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் வீரச்சாமி (40), அவரது மனைவி பஞ்சவர்ணம் (36). இருவரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகனாக 5 வயதான கோடீசுவரன், எல்.கே.ஜி படித்து வந்துள்ளார். நேற்றைய தினம், சிறுவன் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு உடனே வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டின் அருகே கிடந்த பாட்டிலில் இருந்த குளிர்பானத்தை கோடீசுவரன் குடித்ததாகவும், அதன்பின் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததும் தெரியவந்தது. சிறுவன் பருகிய பாட்டிலில் என்ன வகை திரவம் இருந்தது என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பாட்டில் எங்கிருந்து வந்தது, யார் வைத்தது என்பதையும் கண்டறிய முயற்சி நடைபெற்று வருகிறது.
சிறுவனின் திடீர் மரணம் அந்த பகுதிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.