எங்கு திரும்பினும் மரண ஓலம்! ஆப்கானிஸ்தான் இயற்கை பேரழிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100-ஆக உயர்வு!
Seithipunal Tamil September 03, 2025 05:48 PM

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குனார் மாகாணம் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, பெரும்பாலும் மலைகள் சூழ்ந்த பகுதியாகும். இங்கு வீடுகள் பெரும்பாலும் மண்ணால் கட்டப்பட்டிருப்பதால் இயற்கை பேரிடர்களுக்கு மிகுந்த பாதிப்புக்குள்ளாகும்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.47 மணியளவில் குனார் மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து நிகழ்ந்த அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகின. நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள நுலாலாபாத் நகரம் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியூட்டும் இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பெரும்பாலான மக்கள் இரவில் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டதால் தப்பிக்க முடியாமல் பலர் சிக்கினர். ஆரம்ப தகவலின்படி, 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்தது.

மேலும் 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்தது.

பின்னர் வெளியான தகவலின்படி, இந்த பேரழிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கையும் 3,500-ஆக அதிகரித்துள்ளதாக ஊடக மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் அப்துல் ஜப்பார் பெஹிர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.