வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்குமா?
TV9 Tamil News September 03, 2025 05:48 PM

வானிலை நிலவரம் – செப்டம்பர் 2, 2025: இன்று (செப்டம்பர் 2, 2025) காலை 5.30 மணி அளவில், வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, இன்று (செப்டம்பர் 2) மற்றும் நாளை (2025, செப்டம்பர் 3) வட தமிழகத்தின் சில இடங்களிலும் தென் தமிழகத்தின் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தரைக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை:

pic.twitter.com/k0dTOI2nx2

— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc)


அதனைத் தொடர்ந்து, 2025, செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 8 வரை தமிழகத்தில் மிதமான மழை மட்டுமே நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருவதால், வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில், சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? – அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த ரிப்போர்ட்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: கேரளாவில் பரவும் மூளையை தின்னும் அமீபா.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு..

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனை தொடர்ந்து கரூரில் 36.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் 37.5 டிகிரி செல்சியஸ், ஈரோடு 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34.2 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 33.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.