கோவையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் எடிசன். இவர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறுகையில், " கோவை உப்பிலிபாளையம் சாலையில் மணிகண்டன் என்பவர் நடத்தி வந்த பிரியாணி கடைக்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி குடும்பத்தினருடன் சாப்பிடுவதற்காக நான் சென்றிருந்தேன். அப்போது நான் தந்தூரி சிக்கன் மற்றும் முழு பொரித்த கோழிக்கு (கிரில் சிக்கன்) ஆர்டர் செய்தேன். அப்போது ஊழியர் கோழி இறைச்சி துண்டுகளை பரிமாறியிருந்தார்.
ஆனால் பரிமாறப்பட்ட சிக்கன் துண்டுகளில் ‘லெக்பீஸ்’ இல்லை என்பதை கவனித்தேன். இதுகுறித்து கேட்டபோது, ஊழியர்கள் சரியான பதில் அளிக்காமல், குறைபாட்டை சுட்டிக்காட்டிய எனக்கு குடும்பத்தினர் முன்னிலையிலேயே என்னை ஆவேசமாக பேசி மிரட்டினார்கள். இதனால் எனக்கு அங்கு அவமானம் ஏற்பட்டது.
மேலும், இறுதியில் வற்புறுத்தியதையடுத்து, சமையலறையிலிருந்து தாமதமாக சில ‘லெக்பீஸ்’ துண்டுகளை கொண்டு வந்தனர்.
நான் முழு கோழிக்கு பணம் கொடுத்து வாங்கியும் அதில் உள்ள 'லெக்பீஸ்' துண்டுகளை திருடி உள்ளனர். ஓட்டலில் விற்பனைக்காக உள்ள படத்தில் உள்ளவாறு கொடுக்காமல் உறுதிமொழியை மீறி இருக்கிறார்கள். இது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும். எனவே பில் தொகை ரூ.1,196-ஐ வழங்குவதுடன், மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கில் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, மனுவை விசாரித்த கோவை நுகர்வோர் மன்ற நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர் மாரிமுத்து, ஓட்டல் உரிமையாளர், பாதிக்கப்பட்டவருக்கு மனஉளைச்சலுக்காக ரூ.10000 -மும் , வழக்குச் செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.