சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான 3 நாள் பயிற்சி பட்டறை நிறைவு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக ஊடகங்களில் பரவும் பொய்செய்திகள், வெறுப்புப் பேச்சுகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வது குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார்.
உதயநிதி ஸ்டாலின் தனது உரையில்,“இன்றைய காலக்கட்டத்தில் சமூக ஊடகங்கள் வளர்ந்திருப்பதோடு, அதே அளவுக்கு பொய்யான செய்திகளும் அதிகமாக பரவுகின்றன. இந்தியாவில் ஒரு பாசிச கும்பல், பொய்செய்திகளை பரப்புவதே அடிப்படை கொள்கையாகக் கொண்டுள்ளது.
மக்களை குழப்பவும், அறிவை மங்கச் செய்யவும் திட்டமிட்டே Disinformation பரப்பப்படுகிறது. இது உலகளாவிய அபாயங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் அபாயம் உள்ளது” என்று எச்சரித்தார்.
மேலும் அவர்,“வதந்திகளில் Misinformation மற்றும் Disinformation என இரண்டு வகைகள் உள்ளன. நோக்கம் இல்லாமல் பரவுவது Misinformation ஆகும். ஆனால், திட்டமிட்டு, அரசியல் உள்நோக்கத்தோடு பரப்புவது Disinformation ஆகும். இது தான் மிகவும் ஆபத்தானது.
போலிச் செய்திகளோடு வெறுப்புப் பேச்சும் சிறுபான்மையினரையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் பெரிதும் பாதிக்கிறது. வட மாநிலங்களில் பீஃப் வைத்திருப்பதாகக் கூறி மக்களை கும்பலாக அடித்த சம்பவங்களும், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் எனப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதும் அதற்கு உதாரணம்” என குறிப்பிட்டார்.
தனது அனுபவத்தை பகிர்ந்த அவர்,“கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிறப்பால் ஏற்றத்தாழ்வு சொல்கின்ற எந்த விஷயத்தையும் அழிக்க வேண்டும் என நான் பேசியிருந்தேன். அதை திரித்து, நான் சொல்லாத விஷயங்களையும் பரப்பினர். இதற்காக, என் தலையை சீவினால் 10 இலட்சம் தருவேன் என ஒரு சாமியார் அறிவித்தார்.
ஆனால் நான் அத்தகைய சவால்களுக்கு அஞ்சவில்லை. தமிழ்நாடு உடனே எதையும் நம்பாது. ஏனெனில் இது தந்தை பெரியார் பண்படுத்திய மண். அவர் சொன்னது போல, யாரேனும் சொன்னாலும் உடனே நம்பாதீர்கள். உன் பகுத்தறிவு ஏற்றால் மட்டும் ஏற்றுக்கொள்” என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:“பொய்செய்திகளை எதிர்கொள்வதற்காக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, அரசு சார்பில் Fact Check Unit தொடங்கப்பட்டது. இன்று அந்த பிரிவு வேகமாக செயல்படுவதால், பொய்யான தகவல்கள் பரப்புவோர் அச்சத்தில் உள்ளனர். இதன் விளைவாக, கடந்த ஆண்டுகளை விட தற்போது தமிழ்நாட்டில் தவறான தகவல்கள் பரவுவது குறைந்துள்ளது” என்றார்.
துணை முதலமைச்சர் உதயநிதியின் இந்த உரை, “சமூக ஊடக சவால்களை சமாளிக்க விழிப்புணர்வே ஆயுதம்” என்ற செய்தியை வலியுறுத்துவதாக அமைந்தது.