அதிமுக கூட்டணியில் குழப்பம்? பாஜக தலைவர்களுக்கு கண்டிஷன் போட்ட அமித் ஷா.. என்ன மேட்டர்?
TV9 Tamil News September 06, 2025 03:48 AM

சென்னை, செப்டம்ர் 05 : அதிமுக மற்றும் அதன் தலைவர்களை விமர்சிக்க கூடாது என பாஜக தவைலர்கள், நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) அறிவுறுத்தியுள்ளார். மேலும், அதிமுக பாஜக கூட்டணியை (AIADMK BJP Alliance) வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்ட நிலையில், 2026 தேர்தலுக்கு மீண்டும் கூட்டணி அமைத்தது. கூட்டணி அமைந்ததில் இருந்தே சலசலப்புகள் இருந்து வருகிறது.

மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுகவில் உள்ள சீனியர் தலைவர்களுக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மேலும், அதிமுக ஒன்றிணைக்கும் முயற்சியை எடப்பாடி பழனிசாமிடம் முன்வைத்து வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, அதிமுகவில் இருந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கவே மாட்டேன் என கூறி வருகிறார். இதனால், அதிமுகவிலேயே சலசலப்புகள் இருந்து வருகிறது.

Also Read : நயினார் நாகேந்திரனின் மகனுக்கு பொறுப்பு… 25 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள்..

அதே நேரத்தில், பாஜகவிலும் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்த ஐந்து மாதத்தில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இப்படி கூட்டணிக்குள்ளே  பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், 2025  செப்டம்பர் 3ஆம் தேதி  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தமிழக பாஜக  தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா கண்டீஷன்

இந்த கூட்டத்தில் பாஜக மாநில நயினார் நாகேந்திரன், மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழக அமைப்பு பொதுச் செயலர் கேசவ விநாயகம், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் அவர் கலந்து கொள்ளவில்லை.

இரண்டு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கூட்டணியை பலப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், அதிமுக பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Also Read : பாஜகவில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி? அண்ணாமலை சொன்ன கருத்து.. மாறுமா கூட்டணி கணக்கு?

ஓ. பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளதாக தெரிகிறது.  குறிப்பாக, அதிமுக மற்றும் அதன் தலைவர்களை விமர்சிக்க கூடாது எனவும் பாஜக தவைலர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தியதாக தெரிகிறது. மேலும், அதிமுக பாஜக கூட்டணியை வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளதாக தெரிகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.