மும்பை: வாட்ஸ்அப் மிரட்டல்; கணபதி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம்? - உஷார் நிலையில் போலீஸ்!
Vikatan September 06, 2025 06:48 PM

மும்பையில் நாளை விநாயகர் சதுர்த்தியின் இறுதிநாளாகும். ஆனந்த சதுர்த்தியான நாளை ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே 7வது நாளில் ஆயிரக்கணக்கான கணபதி சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சிய சிலைகள் நாளை கரைக்கப்படும். இதில் எந்த வித அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாதர், கிர்காவ், ஜுகு போன்ற கடற்கரைகளில் சிலைகளை கரைக்க மாநகராட்சி நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த விநாயகர் சிலை கரைப்பை சீர்குலைக்கப்போவதாகவும், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாகவும் மிரட்டல் வந்துள்ளது.

400 வெடி மருந்துகளுடன் 14 தீவிரவாதிகள்

மும்பை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையின் ஹெல்ப்லைன் வாட்ஸ்அப் நம்பருக்கு இந்த மிரட்டல் வந்துள்ளது. அதில் 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளுடன் 14 தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்திருப்பதாகவும், அவர்கள் 34 வாகனங்களில் வெடிகுண்டுகளை வைப்பார்கள் என்றும், இதன் மூலம் ஒரு கோடி மக்களை கொலை செய்ய முடியும் என்றும், இத்தாக்குதல் மூலம் ஒட்டுமொத்த நகரமே அதிரும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை லஷ்கர்-இ-ஜிஹாதி என்ற அமைப்பு அனுப்பி இருந்தது. இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார், தீவிரவாத தடுப்பு படைக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இம்மிரட்டலை தொடர்ந்து முக்கியமான கணபதி மண்டல்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாத வதந்திகளை நம்பவேண்டாம் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் விடுத்துள்ள செய்தியில், ''எந்த வித மிரட்டலையும் போலீஸார் எதிர்கொள்வார்கள். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.