ஆர்.எஸ்.எஸ். முதல் துணை ஜனாதிபதி வரை... யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?!
Dinamaalai September 10, 2025 12:48 PM

"முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் தனது மகன் இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து ராதா கிருஷ்ணன் என்று பெயரிட்டதாக” இவரது தாய் ஜானகி கூறியிருக்கிறார். 

இந்திய துணை ஜனாதிபதியாக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். விரைவில் துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் இனி நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவராக இருந்து வழிநடத்துவார். அடுத்த 5 ஆண்டுகள் அவர் இந்த பதவியில் இருப்பார்.

1957ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி திருப்பூரில் சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் பிறந்தார். வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்தில், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், கைப்பந்து, ஓட்டப்பந்தயம் என சகல விளையாட்டுகளிலும் சிறந்தவராக விளங்கினார். 16 வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்த இவர் 1974ம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க. மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அதன் பிறகு, 2004, 2014 மற்றும் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அதே தொகுதியில் தோல்வியை தழுவினார்.

எம்.பி.யாக இருந்த காலத்தில், ஜவுளித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (பி.எஸ்.யு.) மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

2004ம் ஆண்டு ஐ.நா.பொதுச் சபைக்கான நாடாளுமன்ற குழுவிலும், தைவானுக்கான முதல் நாடாளுமன்றக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். அதே ஆண்டு தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவர் நாடு முழுவதும் நதிகளை இணைப்பது, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது, தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வருவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ரத யாத்திரை நடத்தினார். 2007-ம் ஆண்டு வரை 19 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு 93 நாட்கள் அவர் ரத யாத்திரை சென்றுள்ளார்.

2016-ம் ஆண்டு சி.பி.ராதாகிருஷ்ணன் கொச்சியில் உள்ள கயிறு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் அவர் 4 ஆண்டுகள் இருந்தார். அப்போது இந்தியாவில் இருந்து கயிறு ஏற்றுமதி ரூ.2,532 கோடி என்ற அளவுக்கு உயர்ந்தது.

2020-2022-ம் ஆண்டு காலத்தில் கேரளாவின் பா.ஜ.க. அகில இந்திய பொறுப்பாளராக பதவி வகித்தார். 2024-ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி மராட்டிய மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு ஜார்கண்ட் மாநில கவர்னராக 1½ ஆண்டுகள் பதவி வகித்தார். ஜார்கண்டில் அவர் பணியாற்றிய காலத்தில், தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஆகிய கூடுதல் பொறுப்புகளையும் கவனித்தார்.

புதிய துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், நார்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து, பெல்ஜியம், ஹாலந்து, துருக்கி, சீனா, தைவான், தாய்லாந்து, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளதேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவின் நெருங்கிய நண்பரான சி.பி.ராதாகிருஷ்ணன், சிறுவயதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.