ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி இரவு நடந்த கொலை வழக்கில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தோடகுண்டா மற்றும் தோகரகல்லு கிராமங்களுக்கு இடையில் கோலா அஹோபிலம் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த அஸ்பாரி போலீசார், குற்றவாளியாக பசப்பா என்பவரை கைது செய்துள்ளனர். அவர், அஹோபிலத்தின் மனைவி கங்காவதியின் காதலன் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அஸ்பாரி மண்டலத்தைச் சேர்ந்த அஹோபிலம், தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் கர்நாடகாவின் யாதகிரி மாவட்டம், ரத்னாதிகி கிராமத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்திருந்தார். அங்கு, அவரது மனைவி கங்காவதி, பசப்பா என்ற ஒரு இளைஞருடன் காதலுறவில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அஹோபிலம், தனது மனைவியின் காதல் விவகாரத்தை அறிந்த பிறகு, அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டைகள் நடைபெறத் தொடங்கின. இதையடுத்து, சொந்த ஊரான தோகரகல்லுவிற்கு மனைவியுடன் திரும்பினார். ஆனால், அவரது மனைவி பசப்பாவுடன் தொடர்ந்து கள்ள உறவில் இருந்துள்ளார்.
காதலனுடன் தொடர்பில் இருந்த கங்காவதி, தனது கணவர் அஹோபிலத்தின் அன்றைய பயணத்தை பசப்பாவிடம் முன்னதாகவே கூறியிருந்தார். அதன்படி, பசப்பா கர்நாடகாவிலிருந்து அஸ்பாரிக்கு வந்தார், ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து அருகிலேயே மறைந்து இருந்தார்.
அன்று இரவு, அஹோபிலம் தனது கிராமத்திலிருந்து பைக்கில் வெளியேறியபோது, வழியில் அவரை மறித்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொன்றுவிட்டு, பசப்பா தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அஸ்பாரி சிஐ கங்காதர் தலைமையிலான போலீசார், சிறப்புக் குழுவுடன் சேர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் முடிவில், பசப்பா தற்போது காவலில் உள்ளதாக, போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இக்கொலை வழக்கு குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.