கோவையில் இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு 2025 நடைபெற்றது. இதில் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்கலந்து கொண்டு பேசினார். அப்போது, 'தர்மஸ்தலா விவகாரத்துக்கு ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ. இடையேயான மோதலே காரணம்,' என பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: முதல்வர் பதவி போட்டியில் இருப்பது யார்; அடுத்த முதல்வர் யார் போன்ற கேள்விகளுக்கு தனி நபர்களிடம் பதில் தேடுவது அர்த்தமற்றது. இத்தகைய விஷயங்களில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கர்நாடகாவில் நான் ஒன்றும் தனி நபராக கட்சிக்கு வெற்றி தேடி தரவில்லை என்றும், மக்கள் எங்களை நம்பினார்கள். நாங்கள் நல்ல நிர்வாகத்தை தந்து கொண்டிருக்கிறோம். ஒற்றுமையாக இருப்பதே வலிமை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டசபையில் நான் ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடியது சர்ச்சையாகி இருக்கிறது. ஏன் பாடினேன் என்ற கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன் என்றும், பா.ஜ.வுக்கு என்று கொள்கை இல்லாமல் இருப்பதே அதன் பலம். ஆர்.எஸ்.எஸ்.தான் பா.ஜ. கொள்கையின் அடித்தளம் என்று கூறியுள்ளார்.
அத்துடன், நான் காங்கிரஸ்காரனாக பிறந்தேன்; காங்கிரஸ்காரனாகவே மரணிப்பேன் என்றும், கர்நாடகாவில் 'ஏக்நாத் ஷிண்டே' என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். மேலும், நேரு குடும்பத்தின் விசுவாசி; காங்கிரஸின் விசுவாசி. வேண்டுமென்றே இந்த சந்தேகத்தை தூண்டுகிறார்கள். அதற்கு பலன் கிடைக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
மேலும், உண்மையில்லை நான் ஒரு ஹிந்து என்பதில் பெருமை கொள்கிறேன் எனவும், உண்மையான ஹிந்து என்பதால், எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். அத்துடன், தர்மஸ்தலாவின் புகழை கெடுப்பதற்காக காங்கிரஸ் சதி செய்வதாக பா.ஜ. கூறுவது அபத்தமானது எனவும், அதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளதோடு, தர்மஸ்தலா விவகாரத்துக்கு ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ. இடையிலான மோதலே காரணம் என்பது தான் உண்மை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் பா.ஜ. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பேசிய பேச்சுகள், ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. உண்மை வெளியே வரும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்
மேலும், 2023-இல், 136 தொகுதிகளில் வெல்வோம் என்றேன்; அதன்படி நடந்து, ஆட்சி அமைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். 2028-லும் கர்நாடகாவில் காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும். நாடு மாற்றத்துக்கு ஏங்குகிறது என்றும், 2029-இல் ராகுல் பிரதமராக பொறுப்பேற்பார் என்று கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.