தமிழக முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்காக கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். = நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். = நான், ‘பெண்கள் – விவசாயிகள் – மீனவர்கள் – நெசவாளர்கள் – தொழிலாளர்கள்’ என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.” என்று, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் மாநிலம் முழுவதுமுள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் உறுப்பினராக சேர்ந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரை, அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் ஒன்றுதிரட்டி, உறுதிமொழியேற்றிட வேண்டும்.
‘ஏ..தாழ்ந்த தமிழகமே’ என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அன்றய தமிழ்நாட்டின் நிலையை எடுத்துக்காட்டிச் சொற்பொழிவாற்றினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அதன்பின், அவரே இந்த மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, இருமொழிக் கொள்கையை நிலைநாட்டி, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தி தமிழரின் மானத்தையும் தமிழ்நாட்டின் பெருமையையும் மீட்டார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சரான நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 5 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து, இன்று நாம் காணும் நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்துத் தந்தார். இடையில் ஒரு சில முறை தமிழ்நாட்டு அரசியலில் விபத்து ஏற்பட்டு, ஆட்சி மாற்றத்தினால் மாநிலத்தின் வளர்ச்சி படுபாதாளத்திற்குச் சென்ற நிலையில், கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு இலக்குகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
ஒன்றிய பா.ஜ.க அரசின் வஞ்சகத்தாலும், அதனிடம் அடிமையாக இருக்கின்ற அ.தி.மு.க.வின் துரோகத்தாலும் நாம் இழந்தவற்றை மீட்கும் முயற்சியில் கடந்த நான்காண்டுகளில் பெருமளவு முன்னேறியுள்ளோம். பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்திலான வளர்ச்சி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் உயர்ந்த நிலை, மருத்துவத்துறையில் மக்களின் நலன் காக்கு சிறந்த கட்டமைப்பு, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற மாநிலம், பெண்களின் முன்னேற்றத்திற்கும் தற்சார்பு நிலைக்கும் வழிவகுக்கும் மாநிலம் என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே தமிழ்நாட்டின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் அளவுக்குத் திராவிட மாடல் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அண்மையில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த நிலையில், அங்கு வாழும் தமிழர்கள் நம் மாநிலத்தின் நிலைகண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தனர்.
உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை அவரது கொள்கை வாரிசாகத் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தபோது நம் ஆட்சியின் சாதனைகள் யாவும் பெரியார் – அண்ணா -கலைஞர் ஆகியோரின் வழித்தடத்தில் தொடர்வதை உணர்ந்தேன். திராவிடத்தை உலக நாடுகள் அறிந்துகொண்டு ஆய்வு செய்கின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாகக் கழக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும்.
கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.கழகம். நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம். பேரறிஞர் பெருந்தகை அண்ணா போதித்த கட்டுப்பாட்டை முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்து, இன்று உங்களில் ஒருவனான என் தலைமையிலும் அதே கட்டுப்பாட்டுடன் கொள்கைக் கூட்டமாக உடன்பிறப்புகள் திரள்வதை கரூரிலும் காண இருக்கிறேன். இலட்சிய வீரர்களாக 2026 தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் இந்த முப்பெரும் விழா என்று பதிவிட்டுள்ளார்.