நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே காதலியை காரில் அழைத்துச் சென்ற இளைஞர், அந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அஜய் (26), இன்ஜினியராக உள்ளார். இவருக்கு நாமக்கல் ஏ.எஸ்.பேட்டைச் சேர்ந்த தண்டபாணியின் மகள் நந்தினி (21) என்ற இன்ஜினியரிங் கல்லூரி மாணவியுடன் கடந்த சில ஆண்டுகளாக காதல் தொடர்பு இருந்தது.
இவர்கள் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டனர்.
இந்தநிலையில் நேற்று நந்தினி வழக்கம்போல் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்றார். பிற்பகல் கல்லூரி முடிந்து, பஸ்சில் நாமக்கல் வந்து இறங்கிய பிறகு, சேலம் சாலை சந்திப்பில் காத்திருந்த அஜய் மற்றும் அவரது உறவினர்கள் யுவராஜ், ஜெயலட்சுமி ஆகியோர் உட்பட நான்கு பேர் இருந்த காரில் ஏறினர்.
அப்போது அவரது தந்தை தண்டபாணி மகளை அழைத்துச் செல்ல வந்தார். காரில் மகளைக் காதலன் அழைத்துச் செல்லும் காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அஜய் மற்றும் அவருடைய உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் உறவினர்களை செல்போனில் அழைத்து, சம்பவ இடத்திற்கு வரவழைத்தார்.
இதனால் ஏற்பட்ட தகராறின்போது, அஜய் தன்னிடம் வைத்திருந்த தாலியை நந்தினியின் கழுத்தில் கட்டினார். மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு கோபமடைந்த தண்டபாணி மற்றும் உறவினர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்து, உள்ளிருந்தவர்களை தாக்கினர்.
சம்பவத்தை பார்த்த போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் தலையீடு செய்து, அஜய், நந்தினி உட்பட 5 பேரை மீட்டு நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
அப்போது, நந்தினி, “அஜய்யை விருப்பத்துடன் திருமணம் செய்துகொண்டேன்,” என தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருபுறத்தாரிடமும் பேசி சமரசம் செய்த போலீசார், இருவரையும் அனுப்பி வைத்தனர்.
மேலும் களவாணி பட பாணியில் காருக்குள் வைத்து காதலிக்கு வாலிபர் தாலி கட்டிய சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.