டயர் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
Top Tamil News September 13, 2025 05:48 PM

திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகரில், எம்.ஆர்.எப்., டயர் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு, 62 பயிற்சியாளர்கள் உட்பட, 820 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் மருத்துவ காப்பீட்டு போடப்படும்.இதற்கான முழு தொகையை, தொழிற்சாலை நிர்வாகம் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கி, பின் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும்.

இந்நிலையில், இந்தாண்டிற்கான காப்பீட்டு தொகையை தர நிர்வாகம் முன்வரவில்லை. மாறாக, என்.ஏ.பி.எஸ்., எனும் தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தை ஏற்க வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளது. இதை கண்டித்து, 10ம் தேதி முதல், தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தம் காரணமாக, ஊழியர்களுக்கான உணவு, பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

இதில் விரக்தியடைந்த ஊழியர்கள், நேற்று மாலை, தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியை ஒட்டுமொத்தமாக வெளியேற முயன்ற ஊழியர்களை, காவலர்கள் வெளியேறவிடாமல் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, சிறிய வாயிற்கதவு வழியாக வெளியேறிய, 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தொழிற்சாலை வாயில் முன் நின்று, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என, அவர்கள் கூறினர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.