திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே, தார்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விவசாயியை திட்டமிட்டு கார் மோதி கொலை செய்ததாக திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மங்கலம் அருகே உள்ள கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). நேற்று முன்தினம், கருகம்பாளையத்தில் உள்ள பள்ளி அருகே தனது ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டிருந்த அவர், பின்னால் வந்த கார் மோதி பயங்கரமாக தூக்கி வீசப்பட்டார்.
அந்த காரை சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி (60) இயக்கி வந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. காயம் அடைந்த பழனிச்சாமிக்கு பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவ உதவியளிக்க முயன்றனர். ஆனால், அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதலில் இது வழக்கமான சாலை விபத்து எனக்கூறி விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், உயிரிழந்த பழனிச்சாமியின் குடும்பத்தினர் மங்கலம் போலீசில் அளித்த புகாரில்,
“கருகம்பாளையத்தில் தார்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழனிச்சாமிக்கு, பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமியுடன் முன்விரோதம் இருந்து வந்தது. அதனைக் காரணமாக கொண்டு, அவர் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றபோது திட்டமிட்டு கார் மோதி கொலை செய்து விட்டார்,” என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் புகாரின் அடிப்படையில் போலீசார் விநாயகா பழனிச்சாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தார்சாலை திட்டத்தில் தன்னிடம் எதிர்ப்பு தெரிவித்த பழனிச்சாமி மீது முன்விரோதம் காரணமாக காரை ஏற்றி கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, வழக்கை கொலை (IPC 302) வழக்காக மாற்றி, விநாயகா பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர். தற்போது மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.