அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் புரட்சி வெடித்தது போல, இந்தியாவிலும் பசி, வேலையின்மை மற்றும் வறுமை அதிகரித்தால் ஒரு புரட்சி வெடிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், "பசி, வேலையின்மை மற்றும் வறுமை அதிகரித்துவிட்டால், இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்" என்று கூறினார். மேலும், "இந்தியாவில் புரட்சி நடக்காமல் இருப்பதற்கு நாம் இன்னும் ஜனநாயக நாடாக இருப்பதுதான் காரணம். ஆனால் அதே நேரத்தில், இந்தியாவிலும் புரட்சி வெடிக்காது என்று யாரும் நினைக்கக் கூடாது" என்றும் அவர் எச்சரித்தார்.
இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏற்கனவே புரட்சிகள் வெடித்துள்ளதை சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம், இதேபோன்ற நிலை இந்தியாவில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். அவரின் இந்த கருத்து, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் மக்களின் அதிருப்தி குறித்து முக்கிய விவாதத்தை உண்டாக்கியுள்ளது.
Edited by Mahendran