BlackMail: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்கள் வெளியானாலும் எல்லா படங்களுமே ரசிகர்களை திருப்திப்படுத்துகிறதா? வெற்றிகரமாக அமைகிறதா? என்பதை கணிக்க முடியாது.
எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கதை திரைக்கதை மற்றும் காட்சிகளில் சுவாரசியம் இருந்தால்தான் அந்த படம் வெற்றி அடையும். லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூலி படமே எதிர்பார்த்த வெற்றியே பெறவில்லை.
அதேபோல் கடந்த 5ம் தேதி முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான மதராஸி திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. அந்த படம் லாபம் என்றாலும் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதே நிஜம். இந்நிலையில்தான் செப்டம்பர் 12ஆம் தேதியான நேற்று 8க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியானது. அதில் ஜி.வி பிரகாஷின் பிளாக்மெயில், அர்ஜுன் தாஸின் பாம், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் குமரன் தங்கராஜன் ஹீரோவாக நடித்த குமார சம்பவம் ஆகிய படங்களுக்கு எதிர்பார்ப்பு உருவானது.
ஏனெனில் இந்த படங்களின் டிரைலர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. அதேநேரம் இவர்கள் மூவருமே பெரிய நடிகர்கள் இல்லை. எனவே இந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்கிற கேள்வி இருந்தது. பிளாக் மெயில் படத்தை மு.மாறன் இயக்க, ஜிவி பிரகாஷ், தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். திரில்லர் படமாக வெளிவந்த இந்த படம் நேற்று அதாவது முதல் நாளில் 19 லட்சம் வரை வசூல் செய்திருக்கிறது.
குட் பேட் அக்லியில் வில்லனாக நடித்து தற்போது முக்கிய நடிகராக மாறி இருப்பவர் அர்ஜுன் தாஸ். விஷால் வெங்கட் இயக்கத்தில் இவர் நடித்த பாம் படம் படத்தில் நாசர், காளி வெங்கட், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். U சான்றிதழுடன் வெளிவந்த இந்த படம் வெளியான முதல் நாளில் 6 லட்சம் வசூல் செய்திருக்கிறது.
குறும்படம் எடுத்து வரும் ஹீரோ ஒரு சினிமாவை எடுக்க முயற்சி செய்யும்போது அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்பதை குமார சம்பவம் படத்தில் சொல்லி இருந்தார்கள். காமெடி காட்சிகளோடு எமோஷனல் காட்சிகளும் கலந்து படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இப்படம் முதல் நாளில் 3 லட்சம் வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.