வேலூர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரசாரம் மேற்கொண்ட போது 108 ஆம்புலன்ஸ் சென்றது. நோயாளி இல்லாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் வெறும் வாகனத்தை வேண்டுமென்றே ஓட்டிக்கொண்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இனி நான் பிரச்சாரம் செய்யும்போது ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸை ஓட்டி வருபவர் அதே ஆம்புலன்ஸில் நோயாளியாக போவார் என மிரட்டல் விடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை சூழ்ந்து கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் துறையூரில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையின்போது வந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் தாக்கினர். இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளரான கர்ப்பிணி பெண் ஆகியோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 10 பேர் மீது துறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தச் சம்பவத்திற்குப், பிறகு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், டிஜிபியின் வழிகாட்டுதல்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "அதிக போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. தவிர்க்க முடியாத பட்சத்தில், அனுமதிக்கும்போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சாலை ஓரங்களில் அல்லது பொது சந்திப்புகளுக்கு அருகில் கூட்டம் நடத்தும்போது போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்கவும் போதுமான காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, மீட்பு வாகனங்கள் மற்றும் காவல் மீட்பு வாகனங்கள் உட்பட அனைத்து அவசர கால வாகனங்களும் தடையின்றிச் செல்ல முடியும் என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்த வேண்டும். அவசர கால வாகனங்கள் செல்வதற்கான பாதையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பெரிய அளவில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறுகிறது என்றால் அருகில் இருக்கக் கூடிய மருத்துவமனைகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த வழிகாட்டுதலை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என காவல்துறையினக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.