அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பு உண்மையா?- நயினார் நாகேந்திரன் விளக்கம்
Top Tamil News September 14, 2025 08:48 AM

குடியரசுத்துணைத் தலைவர் பதவியேற்பு விழா டெல்லியில் இன்று நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்வில்  தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். 

பின்னர் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “குடியரசுத்துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியானது. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோருக்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழர் ஒருவர் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்றுள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்ற இந்த நாள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மகிழ்ச்சியான நாள். சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்ததற்கு  பிரதமர் மற்றும் பாஜக தேசிய தலைவருக்கு நன்றி. 

குடியரசுத்துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் அமித்ஷாவை சந்தித்தேன். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தது பற்றி எனக்கு தெரியாது. அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம். அதேபோல் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் திமுகவிற்கு எதிராக அரசியல் செய்பவர்கள். எம்ஜிஆர் வழியில் பயணிப்பவர்கள். எல்லோரும் தி.மு.க வரக்கூடாது என்பதற்காக செயல்பட்டவர்கள், எதிரணியில் செயல்பட்டவர்கள். எதிரணியில் உள்ள எல்லோரும் ஒன்றாக சேர்ந்து திமுகவை அகற்றி, மீண்டும்தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் மலர செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்றார்.


 

 
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.