அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திடீரென தனது சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு ஆகியவை, முதலில் செப்டம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டு, புதியதாக செப்டம்பர் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தால் ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் மீண்டும் முக்கிய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. சமீபத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, இபிஎஸ்-ம் டெல்லி பயணிக்க உள்ளார் என்பது, அதிமுகவில் ஒருங்கிணைப்பு தொடர்பாக முக்கிய அரசியல் பரிணாமங்கள் நிகழவிருக்கின்றன என அறிகுறியளிக்கிறது. எனவே, தருமபுரி மாவட்டத்தின் சுற்றுப்பயண திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதிகளில் மிகப் பெரிய அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.