மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் கதிரவன் (45) லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கதிரவன், கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். பூதப்பாண்டியை சேர்ந்த ஹரிஹரன் சந்தித்து, திட்டுவிளையில் புதிதாக மருந்தகம் திறப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். விண்ணப்பித்த ஹரிஹரனிடம், ஒப்புதல் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனை மறுத்த ஹரிஹரன், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்களின் திட்டமிட்ட வலைவீச்சில், நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பெற்ற கதிரவன் கையும் களவுமாக சிக்கினார்.
அவரை கைது செய்த போலீசார், வடசேரியில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்த சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.