எலும்பு முறிவுகள் மற்றும் உடைந்த எலும்புகளுக்கு விரைவான சிகிச்சை வழங்கும் வகையில், சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய மருத்துவ கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“எலும்பு-02” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த எலும்பு பசை, முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடங்களில் பிணைக்க வல்லதாக இருக்கிறது. ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள சர் ரன் ரன் ஷா மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, இரத்தம் நிறைந்த சூழ்நிலையிலும் 2–3 நிமிடங்களில் துல்லியமாக ஒட்டும் தன்மையுடன் உள்ளது. மேலும், எலும்பு குணமடையும் போதே இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்படுவதால், மற்றொரு அறுவை சிகிச்சை தேவையில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தயாரிப்பு, உலோக உள்வைப்புகளை (steel plates, screws) தேவையில்லாமல் செய்யக்கூடிய மாற்று தீர்வாக காணப்படுகிறது. சிகிச்சை முடிவுகள் மிகவும் வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை, 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், எதிர்வினை மற்றும் தொற்று அபாயங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பயன்பாட்டில் உள்ள எலும்பு சிமென்ட்கள் மற்றும் வெற்றிட நிரப்பிகள், பசை பண்புகளைக் கொண்டிருக்கவில்லை. 1940களில் உருவாக்கப்பட்ட எலும்பு பசைகள், ஜெலட்டின் மற்றும் எபோக்சி ரெசின் போன்றவை அடிப்படையாக இருந்தாலும், உயிர் இணக்கத்தன்மை சிக்கல்களால் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், சிப்பிகளின் ஒட்டும் தன்மையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட “எலும்பு-02” மனித உடலுக்கே பொருத்தமாகவும், நவீன மருத்துவ தேவைக்கு முக்கிய தீர்வாகவும் காணப்படுகிறது. உலகளாவிய மருத்துவத் துறையில் இது ஒரு பெரும் புரட்சியாக கருதப்படுகிறது.